காயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal




பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.

வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே காயகற்பக் கலையாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.